தமிழக ஏலத்தோட்ட விவசாயிகளுக்கு இடுக்கி மாவட்டம் சார்பில் ஷார்ட் விசிட் பாஸ்

தமிழக ஏலத்தோட்ட விவசாயிகளுக்கு இடுக்கி மாவட்டம் சார்பில் ஷார்ட் விசிட் பாஸ்
Updated on
1 min read

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டம் வைத்துள்ள தமிழக விவசாயிகளுக்கு, தோட்டத்திற்குச் சென்று பராமரிப்புப் பணிகள் செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "ஷார்ட் விசிட் பாஸ்" வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியை ஒட்டிய கேரளப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சொந்தமாகவும், குத்தகைதாரர்களாகவும் தோட்டம் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், கடந்த மூன்று மாதங்களாக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஏலவிவசாயிகள் தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று, தோட்டங்களை பராமரிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 1047 ஏல விவசாயிகள் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கேட்டு தேனி மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து ஏல விவசாயிகளின் நிலை குறித்து தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து தமிழக விவசாயிகளுக்கு ஏலத்தோட்டங்களுக்குச் செல்ல "பிராப்பர்டி மெயின்டன்ஸ்" என்ற முறையில் ஒருநாள் மற்றும் ஆறுநாள் "ஷார்ட் விசிட் பாஸ்" இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்க முடிவு செய்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக இப்பகுதியிலிருந்து ஏராளமான ஏலத்தோட்ட விவசாயிகள் கேரளாவுக்குச் சென்று வர தொடங்கி உள்ளனர். திங்கட்கிழமை 195 பேர்களும், செவ்வாய் 288 பேர்களும், புதன் 213 பேர்களும் சென்றுள்ளனர்.

ஷார்ட் விசிட் பாஸ்

கேரளாவில் ஏலத்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேரள அதிகாரிகளிடம் கேட்டபோது, விவசாயிகளுக்கும், ஏலக்காய் ஆக்சனுக்கு செல்பவர்களுக்கும் ஒருநாள் பாஸ் கிடைத்து விடுகிறது.

ஆறுநாள் "ஷார்ட் விசிட் பாஸ்" என்றால், பஞ்சாயத்து பணியாளர்கள் மூலம், அனுமதி கோரிய விவசாயிகளின் தோட்டத்தில் அவர்கள் தங்குவதற்கான தனி வீடுவசதி உள்ளிட்டவை உண்டா என்பதை விசாரித்துவிட்டு பாஸ் உறுதி செய்யப்படுகிறது. இல்லையென்றால் தள்ளுபடியாகிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in