

புதுச்சேரியில் கொலை முயற்சி வழக்கில் பிடிபட்ட 23 வயது இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தன்வந்திரி நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரைக் கடந்த 7 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது கில்லால், சதீஷ், மற்றொரு சதீஷ் உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலைய போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 10) இவ்வழக்கு தொடர்பாக 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 23 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்று பாதித்த அந்த இளைஞர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
மற்ற 4 பேரும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூன் 11) தன்வந்திரி நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கைது செய்த போலீஸார் மற்றும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி வழக்கில் பிடிபட்ட இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் போலீஸார் மத்தியில் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.