

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள் 50 சதவீதம் படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டமைப்பு செயலர் வி.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினர்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசின் வழிகாட்டுதல்படி 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒதுக்க இசைவு தெரிவித்தன.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் அனுபவம் மிக்க சிறப்பு மருத்துவர்களும், அர்ப்பணிப்புடன் கூடிய மற்ற ஊழியர்களும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அரசுக்கு உறுதியளித்தோம்.
அரசு ஆலோசனையின்படி, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கும் ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.