

புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 132 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 77 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 84 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே 55 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 5 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் தற்போது புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற 12 பேரும் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 84 ஆகவும், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 145 ஆகவும் உள்ளது.
இன்று கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஜிப்மரில் ஒருவரும், வெளிமாநிலத்தில் சிசிச்சை பெற்று வந்த புதுச்சேரி நபர் ஒருவரும் என மொத்தம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,752 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 8,548 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 61 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சரியான தகவல்களைத் தராததால் தொற்று கண்டறிவதில் காலதாமதமாகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
கபசுரக்குடிநீர், நிலவேம்புக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் என்ற ஆயுர்வேத மருந்துகளை பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி புதுச்சேரியில் உள்ள 121 சுகாதார மையங்களிலும் பாதுகாப்புக் கவசம், பிபிஇ பாதுகாப்புக் கவசங்கள் முன்னேற்பாடாக வழங்கி வருகிறோம். ஆகவே அவற்றுக்குத் தட்டுப்பாடு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார்.