

அமெரிக்கா கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினர் இளைஞரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் ஆதரவு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரித்து தெரிவித்து ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்கிழமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக கவுன்சில் உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா துணைச் செயலாளர்கள் காளிதாஸ், வடகொரியா, ஒன்றிய கவுன்சிலர் .டீரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு படுகொலையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எஸ். முஹம்மது ராஃபி