

புதுச்சேரியில் 11 வயதுச் சிறுவன் உட்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 75 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக 11 வயதுச் சிறுவன் உட்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே 52 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 9) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் தற்போது புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் காமராஜ் நகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூயிலும், வில்லியனூரைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர் சென்னையில் சிகிச்சையில் உள்ளனர். மாஹே பிராந்தியத்தில் வெளிநாடு சென்று திரும்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் உடல் நலமுடன் இருக்கின்றனர்.
இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 77 ஆகவும், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 132 ஆகவும் உள்ளது. குறிப்பாக 32 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 40 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 3 பேர் வெளி மாநிலங்களிலும் சிகிச்சையில் உள்ளனர். மாஹே பிராந்தியத்தில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 8,472 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 8,292 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 40 பேருக்கு முடிவு வரவேண்டியுள்ளது. ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் கூட இப்போது நலமுடன் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பால் குறைந்துள்ளதாக நம்புகிறோம். ஆகவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் பாதிப்பு எண்ணிக்கை குறையும்" எனத் தெரிவித்தார்.