

இலவச, மானிய மின்சாரத்தை ரத்து செய்வதைத் தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியை இன்று (ஜூன் 9) சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் 1989-ம் ஆண்டில் இருந்து அனைத்து விவசாயிகளுக்கும் முழு மானியத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் தொடர்ந்து நஷ்டத்தில் விவசாயம் செய்து வருவதால், அவ்வப்பொழுது கடன் தள்ளுபடியும் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை மற்றும் போராட்டங்கள் வாயிலாக நிவாரணம் பெற்று விவசாயிகளைக் காப்பாற்றி வருகின்றோம்.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் 2020-ல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கூடாது என்றும், வீடுகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்ககூடாது என்றும் சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதாக அறிகிறோம். மத்திய வேளாண் விலைபொருள் விலை நிர்ணய மற்றும் அங்கீகார கமிட்டி விவசாய விளை பொருட்களுக்கு மத்திய அரசு கூறி வந்தபடி 3 மடங்கு லாபத்தை கடந்த 6 ஆண்டுகளாக ஒரு பயிருக்கேனும் கொடுக்கப்படவில்லை. மாறாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்ற வகையில் தொடர்ந்து விலை நிர்ணயத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து வழங்குகிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற இலவச மின்சாரத்தை நிறுத்துவதால் நாட்டில் அமைதி கெடும். மத்திய அரசு மின் திருத்தச் சட்டம் அறிவித்தவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாக சாதாரண முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இவற்றுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்".
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.