

மதுரை கே.கே நகரில் நகர் காங்கிரஸ் சார்பில், தூய்மைப் பணியாளர், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தடுப்பு நடவடிக்கையில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். ரூ.1000 நிவாரணம் போதாது. மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ரூ.7, 500 நிவாரணம் வழங்கவேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும். மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கை வசதிகளை பெறவேண்டும். 3 கிளைகள் கொண்ட தனியார் மருத்துவனையில் ஒன்றை கரோனா சிகிச்சைக்கென அரசு வாங்கலாம். தனியார் மருத்துவமனையில் ஏ,பி,சி,டி என, பிரித்து சிகிச்சைக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
தேசியப் பேரிடர், முதல்வர்கள், பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ஏராளமானோர் தாராளமாக நிதி வழங்குகின்றனர். இதில், இதுவரை எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டாலும் தகவல் தர மத்திய அரசு மறுக்கிறது. இதில் வெளிப்படை தன்மை வேண்டும்.
பிற பணிகளைவிட கரோனா தடுப்புக்கென மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்குவதில் முக்கியத்துவம் காட்டவேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கலாம்.
பெரும்பாலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவோர் பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்புகளுக்கு செல்கின்றனர். பிளஸ்-2 தேர்வே மேல்படிப்பை உறுதி செய்கிறது. தமிழகத்தில் கரோனா உச்சத்தை அடையவில்லை என்றாலும், ஏறுமுகத்தில் உள்ளது. சிறு - குறு கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா நிவாரண நிதி குறித்து பட்டியல் அல்லது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை. எம்பி.களின் நிதி ரத்து ஏற்க முடியாது.
தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை. எம்பிக்களுக்கான நிதியை மத்திய அரசு திருப்பி வழங்கவேண்டும். பரிசோதனை மையங்களை அதிகரிக்கவேண்டும்.
தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க, முன் எச்சரிக் கை நடவடிக் கை தேவை. இந்த நேரத்தில் அமைச்சர்கள் குழுவை மக்கள் எதிர்பார்க்கவில்லை. நிவாரணத்தை மட்டுமே எதிர் பார்க்கி ன்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் சையதுபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.