

கோவை மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 8) முதல், உணவகங்கள் திறக்கப்பட இருக்கும் நிலையில், உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூன் 6) உணவகங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன், கோவை மாவட்ட ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, உணவகங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “அனைத்து உணவகங்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கலாம். குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது. 50 சதவீத அளவிற்கு மட்டுமே நாற்காலி, மேஜைகள் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்குப் பதிலாக பார்சலாகப் பெற்றுச் செல்வதை ஊக்குவிக்க வேண்டும். உணவுப் பார்சல்களைக் கொண்டுசெல்லும் முன்னர் விநியோகப் பணியாளர்களை வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
உணவகத்தின் நுழைவாயிலில் கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு சோப்பு ஆயில் மற்றும் சானிடைசர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஊழியர்கள் எல்லா நேரத்திலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களை மட்டும் உணவகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சுவரொட்டிகள் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். வாகன நிறுத்துமிடங்களில் தனிமனித இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனியாக நுழைவாயில்கள் இருக்க வேண்டும். ஊழியர்கள் வந்து செல்வதற்கும், பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தனியாக நுழைவாயில்கள் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கும்போதும், உணவகத்திற்குள்ளும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சமையலறைகள், குடிநீர் வைக்கப்படும் இடங்கள், கைகழுவும் பகுதிகள், கழிப்பறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் கதவு கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள், பெஞ்சு, மேஜைகள் உள்ளிட்டவை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்களால் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் மற்றும் கையுறைகள் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்க வேண்டும். சமையலறைப் பணியாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும். பணியாளர்களில் எவரேனும் ஒருவருக்கு தொற்று அறிகுறி தென்பட்டால், உடனடியாக அவரைத் தனிமைப்படுத்தி, அருகிலுள்ள மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த நபர் தங்கியிருந்த இடம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
குறைந்த அளவிலான உணவுப் பட்டியல் தயார் செய்து கொடுப்பது அவசியம். அனைத்து உணவுகளும் முழுமையான அளவு வேகவைத்துப் பரிமாறப்பட வேண்டும். உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பாத்திரங்களும் வெந்நீரால் சுத்தம் செய்யப்பட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், “மேற்கண்ட அனைத்திற்கும் உரிய பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்றால், உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்கள் உரிய விதிமுறைகளுடன் செயல்படுவதைக் கள அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.