

மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது என்றும், புதிதாக நிதியைக் கொடுத்தது போன்ற ஒரு மாயையை ஆளுநர் உருவாக்கக் கூடாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதனைப் பார்த்து நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மருத்துவத் துறை முனைந்து செயல்பட வேண்டும். பிள்ளையார்குப்பம் பகுதியில் சென்னைக்கு சென்று வந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அந்தப் பகுதிக்கு நானும், அமைச்சர் கந்தசாமியும் சென்று பார்வையிட்டுள்ளோம். இப்போது புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கூட கரோனா தொற்று ஊடுருவ ஆரம்பித்துள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டைச் சுற்றி 25 மீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக வைத்துள்ளோம்.
துணை சபாநாயகர் பாலன் என்னிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
ஆனால், பேரிடர் துறையின் நிதியிலிருந்து அவர்களுக்கு உதவி செய்வதற்கு விதி இடம் கொடுக்கவில்லை. கரோனா தொற்றை அடியோடு ஒழிப்பதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்குவதற்குத்தான் அந்த நிதியைப் பயன்படுத்த முடியும்.
இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்கி, அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, எண்ணெய், மளிகைப் பொருட்கள் போன்றவற்றைக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக உத்தரவிட்டுள்ளேன்.
புதுச்சேரிக்கு 3 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.247.75 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு கடந்த மே மாதத்துக்குப் போட வேண்டிய ஊதியத்தை அளித்து, ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனை அடைத்துள்ளோம். இனிமேல் வருகின்ற வருமானத்தை வைத்து மற்ற செலவினங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
தற்போது நாம் வாங்கிய கடனைப் பற்றிப் பேசாமல், வந்த வருமானத்தைப் பற்றி ஆளுநர் பேசியுள்ளார். ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்படும் இழப்பீடுகளை 5 ஆண்டுகாலம் வரை வழங்குவதாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் நமக்குக் கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. மத்திய அரசு நமக்கு ஏதோ புதிதாக நிதியைக் கொடுத்தது போன்ற ஒரு மாயையை ஆளுநர் உருவாக்கக் கூடாது.
ஜூன் 8 ஆம் தேதி முதல் கோயில், தேவாலயங்கள், மசூதிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது சம்பந்தமாக நானும், அமைச்சர் ஷாஜகானும் மதத் தலைவர்களை அழைத்துப் பேசினோம். அவர்களிடம் கோயில், தேவாலயங்கள், மசூதிகளைத் திறந்ததும் அங்கு வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் விளக்கமாகக் கூறியுள்ளேன்.
ஓட்டல்களில் 8 ஆம் தேதி முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டள்ளது. 95 சதவீதம் இ-வேலட் மூலம் பணத்தைச் செலுத்த வேண்டும். கரோனா தொற்று பரவுவதைத் தடுத்து நிறுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம் கொடுத்துள்ளது. அந்த விதிமுறைகளின்படி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்திருந்தால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை உடனே வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற உத்தரவை வெளியிட்டுள்ளனர். இது பெரிய அளவில் கரோனா பாதிப்பில் இருந்து வெளியேறுபவர்களுக்குப் பயன்படும்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் காலமும் குறையும். எனவே, மத்திய அரசின் இந்தப் பரிந்துரையை ஏற்று புதுச்சேரியில் நடைமுறைப்படுத்துவோம். பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். பட்ஜெட்டுக்கான ஆயத்த வேலைகளை செய்து அதற்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் சட்டப்பேரவை கூட்டப்படும்.
இதற்கிடையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் பட்ஜெட் குறித்த கருத்துகளைக் கேட்டு நான் கடிதம் அனுப்பி இருந்தேன். அது தொடர்பான கருத்துகளை அவர்களும் கொடுத்துள்ளனர். கரோனா தொற்று சமயத்தில் பல்வேறு அமைப்பினரை நேரில் அழைத்து கருத்துகள் கேட்க முடியாது.
ஆகவே, அவர்களின் கருத்துகளை எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம். அவை வந்த பிறகு அனைவருடைய கருத்துகளை எல்லாம் பரிசீலனை செய்து, கரோனா வேகமாகப் பரவும் வேளையில் அதனைத் தடுத்து நிறுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்குமான எந்த அளவுக்கு பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுப்போம்" .
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.