தென் மாவட்டங்களில் முதலாவதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவி: நோய்களின் தாக்கத்தை துல்லியமாக அறியலாம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவியை, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவியை, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் 2-வதாக, தென் மாவட்டங்களில் முதலாவதாக ரூ.25 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு கருவியை, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இக்லியா (Electro chemiluminescence immunoassay analyzer) என்ற உயிர் வேதியியல் பொருட்கள் அளவை கண்டறியும் தானியங்கி பரிசோதனை கருவி தமிழகத்தில் இரண்டாவதாகவும், தென் மாவட்டங்களில் முதலாவதாகவும் தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தக் கருவி மூலம் உடலில் உள்ள பல்வேறு உயிர் வேதியியல் பொருட்களின் அளவை துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம் பல்வேறு நோய்களின் தாக்கத்தை விரைவாகக் கண்டறிய முடியும்.

கரோனா தொற்றின் தாக்கம், பல்வேறு ஹார்மோன்களின் அளவு, புற்றுநோய், எச்ஐவி, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கான குறிகளின் அளவு போன்றவற்றை இந்த கருவி மூலம் துல்லியமாக கண்டறிந்து நோயின் தாக்கத்தை அறிய முடியும்.

இந்தக் கருவி மூலம் 9 முதல் 18 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 15 வகையான பரிசோதனைகளை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in