

“கரோனா ஊரடங்கின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட மஞ்சள் மண்டலத்திலிருந்து, இன்னொரு மஞ்சள் மண்டலத்துக்குச் செல்வது குற்றமா? அதைக் கேட்டால் எங்களைக் கிரிமினல்களைப் போல நடத்துகிறார்கள்” என்று கொந்தளிக்கிறார்கள் கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர்.
பொள்ளாச்சி - திருச்சூர் சாலையில் அமைந்துள்ளது கோவிந்தாபுரம் சோதனைச் சாவடி. இங்கு கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் இன்று தர்ணா போராட்டம் நடத்தியது.
முதலமடை தமிழ் நலச்சங்கம் தலைவர் வி.பி.நிஜாமுதீன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தை, கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மா.பேச்சிமுத்து தொடங்கி வைத்துப் பேசினார். மூங்கில் மடை பி. சரவணன், என்.முருகேசன், ஷேக் முஸ்தபா, அஜித் கொல்லங்கோடு கவிதா, திரவுபதி, சாமிநாதன் ஆகியோர் பேசினர்.
இதுகுறித்து, மா.பேச்சிமுத்து கூறியதாவது:
“இங்கே யாரும் கரோனாவால் இறக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து, சென்னையில் இருந்து வந்த சிலர் இந்தப் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இங்கே ஒரு சிலருக்குக் கரோனா தொற்று அறிகுறி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.
தற்போது கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா மஞ்சள் மண்டலமா இருக்கு. பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவும் மஞ்சள் மண்டலம்தான். ஆனா இந்த மண்டலத்துல இருந்து அந்த மண்டலத்துக்குப் போக சோதனைச் சாவடிக்காரர்கள் விடறதில்லை. கேரளத்தில் உள்ள திருச்சூர் தாலுகா முதல் திருவனந்தபுரம் வரை உள்ள மஞ்சள் மண்டலத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இங்கே டூவீலர் கூட போக முடிவதில்லை.
விவசாயக் கூலிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளைக்கூட விடுவதில்லை. இந்தக் கெடுபிடிகள் காரணமாக, அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். இது என்ன இந்தியா - சீனா எல்லையா? இதைத் தட்டிக்கேட்டால் தீவிரவாதிகளை, கிரிமினல்களைப் போல் எங்களை நடத்துகிறார்கள். இந்த நிலை இனியும் தொடர்ந்தால் இந்த மாநிலத்தில் உள்ள அத்தனை சோதனைச் சாவடிகள் முன்பும் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.