

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பதவிக்கான தேர்வில் விதிமீறல் நடந்துள்ளதாக தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும் புகார் கூறுகின்றனர்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கென, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இந்திய அரசு ஏற்படுத்தியது. தமிழை செம்மொழியாக அறிவித்தபின், இந்த நிறுவனம் 2008 மே 19 ல் முதல் சென்னையில் செயல்படுகிறது.
தமிழின் தொன்மை, நாகரீகம், பண்பாடு போன்ற சிறப்புக்களை கவனத்தில் கொண்டுபல்வேறு திட்டங் களைத் தீட்டி செயல்படுகிறது. தலைவர் (முதல்வர்), துணைத் தலைவர், இயக்குநர், ஆட்சிக் குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர் நிலைக்குழு மற்றும் அலுவல் சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி அமைப்பு.
மூன்றாண்டுக்கான இதன் இயக்குநர் பதவி என்பது முக்கியமானது. 12 ஆண்டாக காலியாக இருந்தது.
இந்நிலையில் பல்வேறு தரப்பிலும் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து இயக்குநர் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, சமீபத்தில் நேர் காணல் நடத்தியது. நிர்வாகத்திறமை, பணி மூப்பு நிலையில் பேராசிரியர் தகுதி வாய்ந்த ஒருவரே இயக்குநர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்றாலும், உதவி பேராசிரியர் தகுதியிலான ஒருவர் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக போட்டியில் பங்கேற்ற பேராசிரியர்கள் சிலர் புகார் தெரிவிகின்றனர். இதி லுள்ள விதிமீறலை மறுபரிசீலனை செய்யவேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர், காமராசர் பல்கலை தமிழ் பேராசிரியரு மான சீனிவாசன் கூறியது:
இந்நிறுவன இயக்குநர் பதவி 10 ஆண்டாக காலியாக இருந்தது. தமிழ் வளர்ச்சிக்கான இந்த பதவியில் திருச்சி, சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்வி பேராசிரியர்களே நீண்ட காலமாக பணியில் இருந்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில் இயக்குநர் காலியிடத்தை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. பேராசிரியர், நிர்வாக பொறுப்பு வகித்த பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் காங்கேயத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் சந்திரசேகரன் என்பவர் இயக்குநராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
தகுதியானவர்கள் நேர்காணலில் இடம் பெற்றிருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல், முறைகேடு நடந் திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். தமிழக முதல்வர், தமிழ் வளர்ச்சி அமைச்சர் ஆய்வு செய்து தகுதியான நபரைதேர்வு செய்யவேண்டும், என்றார்.
இந்த பதவிக்கு விண்ணப்பித்த பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ இயக்குநர் பதவிக்கு பல்கலை பேராசிரியர், நிர்வாக திறமை தேவை என, விதிமுறை உள்ளது. தகுதியான பேராசிரியர் அல்லது இணைப்பேராசிரியரை நியமிக்கலாம்.
இந்த இரு தகுதியில் ஆட்கள் இருந்தும், உதவி பேராசிரியர் ஒருவரை தேர்ந்தெடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது நியமன விதி முறைக் கு எதிரானது. அவர் பொறுப்பு ஏற்பதற்குள் மறுபரிசீலனை செய்யவேண்டும்,’’ என்றனர