

மின் திருட்டைத் தடுப்பதற்காகத்தான் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுகிறது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து இன்று அவர் புதுச்சேரி மாநில பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பிரதமர் மோடி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து கடந்த மே 30 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. முதல் 5 ஆண்டுகளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று 184 நாடுகள் கரோனா தொற்றால் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் நாம் எடுத்த நடவடிக்கை காரணமாக, இந்த காலக்கட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தன.
2020 இல் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதில், ஜூலை இறுதியில் இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 கோடியிலிருந்து 50 கோடி பேர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஜூன் மாதத்தில் 2.50 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரம் பேர் தான் உயிரிழந்துள்ளனர்.
உலகத்திலேயே தொற்று பாதித்தவர்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்தியாவில் 10 முதல் 11 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் உயிரிழப்பு சதவீதமும் மிகக் குறைவு. இதற்கு பிரதான காரணம், தக்க நேரத்தில் தக்க முடிவு எடுக்கப்பட்டதுதான். 30 நாடுகளிலிருந்து இதுவரை 72 ஆயிரத்து 500 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள், மோடி அரசைத் தூக்கி விடலாம் என்று நினைத்தார்கள். அது நடக்கவில்லை. இன்றுள்ள கரோனா பாதிப்பை விட 2010-ல் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
கரோனா காலக்கட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேதான், கடந்த மார்ச் மாதமே ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு என 80 கோடி பேருக்கு மூன்று மாதங்களுக்கான அரிசி, பருப்பு இலவசமாக கொடுத்துள்ளோம்.
உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளது. சீனா நிரந்தரமாக எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதி செய்தது கரோனா வைரஸை மட்டும்தான். மீதியெல்லாம் நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது. 120 நாடுகளுக்கு மருத்துவ உதவி செய்துள்ளோம். இந்தியாவில் பெரிய அளவில் கரோனா பாதிப்பு இல்லை. இதனைச் சமாளிக்கக் கூடிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். வேலையிழப்பைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் துண்டிவிடலாமா? எப்படியாவது இந்த நாட்டில் மக்களுடைய போராட்டத்தைத் துண்டிவிட வேண்டும். அதற்கு சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் துணை போகலாமா? ரயில், பேருந்து மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லத் தயாராக உள்ளோம். அதுவரை தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.
புதுச்சேரியில் மத்திய அரசின் எந்த திட்டங்களும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தமானது, கண்டிக்கத்தக்கது. 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா'வால் யாருக்கும் ஒரு வீடு கூட கட்டித் தரப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. அதேபோல், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மத்திய அரசின் நிவாரணங்களைத் தருவதற்கு புதுச்சேரியில் ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், மத்திய அரசு வழங்கிய கரோனா நிதியில் 15 சதவீதம் கூட செலவு செய்யப்படவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. நாடு முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்காக மத்திய அரசு செலவு செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.3,760 கோடி கொடுத்துள்ளது.
இன்று பெரிய அளவில் மத்திய அரசுக்கான வருமானம் குறைந்துள்ளது, செலவினங்கள் கூடியுள்ளது. ஆனால், மாநில அரசாங்கங்ளுக்கு என்னென்ன உதவி செய்ய முடியுமோ அதனைச் செய்து வருகிறது. கேஸ் இணைப்பை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். மக்கள் முழு விலை கொடுத்து கேஸ் வாங்கிக் கொள்ள வேண்டும். மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என 6 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னோம்.
உடனே மத்திய அரசை கம்யூனிஸ்டுகள் விமர்சித்தார்கள். ஆனால், 6 ஆண்டுகளாக மக்களுக்கு மானியம் கிடைக்கிறது. வீடுகளுக்கு மானியத்தில் கொடுக்கிற கேஸ் இணைப்பை ஓட்டல்களும் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் பயன்படுத்தின. அதனை நிறுத்தத்தான் வங்கியோடு கேஸ் இணைப்பை இணைத்தோம்.
இதேபோல் வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் மின் இணைப்பிலிருந்து வர்த்தகத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டது. எனவேதான், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மீட்டர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அது வந்தவுடனே இலவச மின்சாரத்தை மத்திய அரசு நிறுத்தப் போகிறது எனக் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதற்கு மோடி அரசு விரோதமானது கிடையாது. குஜராத்தில் இலவச மின்சாரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிறது. மாநில அரசு மானியம் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த முடியாது.
மின் திருட்டைத் தடுப்பதற்காகத்தான் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுகிறது. எனவே, புதுச்சேரி, தமிழ்நாடு என எந்த மாநில அரசும் வழங்குகின்ற மானியத்தை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது. மத்திய அரசும் அதனை நிறுத்த அனுமதிக்காது".
இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.