நாளை முதல் 7 நாட்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

நாளை முதல் 7 நாட்களுக்கு பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து நீர் விநியோகம் செய்யப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 5) வெளியிட்ட அறிக்கை:

"ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு 7,776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டிருந்தேன்.

தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து நாளை (ஜூன் 6) முதல், வரும் 15-ம் தேதி முடிய 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.92 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டடங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in