

கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 4) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்
மேலும், தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுவதாக நடிகர் பிரசன்னா குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு மின்சார வாரியம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின் கட்டணம் செலுத்தப்படுகிறது எனவும், நான்கு மாத மின் நுகர்வை இரண்டாகப் பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது எனவும், விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.