

தமிழக பொருளாதாரத்தை உயர்த்தி எதிர்க்கட்சிகளின் ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில், பொதுமக்களுக்கு கரோனா தடுப்புக்கான கபசுரக் குடிநீர், முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈடுபட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா நோய்த் தொற்றை தமிழகத்தில் கட்டுப்படுத்த முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார். தொழில் வளமிக்க மாநிலங்களிலும் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில், தமிழகத்தில் பொருளாதாரம் மேம்பட முதல்வரின் நடவடிக்கைகள் உதவிகரமாக உள்ளன.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எல்ரா செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனம் ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு குறித்து நாடு தழுவிய ஆய்வு நடத்தியது.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு மட்டும் 27 சதவீதம். இந்நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஐந்து மாநிலமும் முன்னணியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மின்நுகர்வு, போக்குவரத்து, மொத்த விலை சந்தைக்கு விவசாய விளைபொருட்கள் வரத்து, கூகுள் அலைபேசி டேட்டா பயன்பாடு அடிப்படையில் நடத்திய இந்த ஆய்வால் இது போன்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.
மேலும்,தொழில் வளர்ச்சி அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பொருளாதார மீட்புநடவடிக்கைகளில் பின்தங்கியுள்ளன என்றும் கூறியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் வேளாண்சந்தை மிக சிறப்பாக செயல்படுகிறது என, அதில் பாராட்டியுள்ளனர்.
70 நாட்களுக்கு மேலான தடை காலத்தில் முதல்வர் மதிநுட்பத்துடன்செயல்பட்டதால் தமிழக பொருளா தாரம் வளர்ந்துள்ளது என, பாராட்டும் பெற்றுள்ளது.
இதன்மூலம் பொருளாதாரம் வீழ்ச்சி என்ற எதிர்க்கட்சிகளின் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலடியை முதல்வர் கொடுத்துள் ளார். அரசுக்கு களங்கம் சுமத்த முக.ஸ்டாலின் நினைக்கிறார்.
அது ஒருபோதும் நடக்காது. பொருளாதார வளர்ச்சியை அதற்கு சான்று. ‘நிசார்கா’ என்ற புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும், வானிலை ஆய்வு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.