

கல்யாண மண்டபங்களில் ஊர்கூடி நடந்த திருமணங்கள் இப்போது இல்லங்களுக்குள் நெருங்கிய உறவுகளின் சங்கமமாக சுருங்கியிருக்கிறது.
கரோனா பொதுமுடக்கத்தால் கல்யாண மண்டபங்களில் திருமணம் நடந்த முடியாதது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வுகளும் ரத்தாவதால் வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளட்டுள்ளனர் திருமண மண்டப உரிமையாளர்கள்.
இப்படியான சூழலுக்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் திருமண மண்டபமான பி.டி.பிள்ளை மண்டபம், பொதுமுடக்க காலத்தில் திருமண நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறது. தங்கள் மண்டபத்தில் திருமணம் நடத்துவோருக்கு அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது இந்த மண்டபம்.
அதாவது, மண்டப வாடகை, செயற்கைப் பூக்களுடன் கூடிய மேடை அலங்காரம், 9 வகைக் கூட்டு, இரண்டு பாயசம், போளியுடன் 50 பேருக்கு சுவையான சைவ மதிய விருந்து, வெல்கம் ட்ரிங்க், நாதஸ்வர மேளம், மணமக்கள் மாலை, மணப்பெண்ணுக்காக ஒரு பந்து மல்லிப்பூ, மேக்கப் கலைஞரின் மூலம் மணமகள் அலங்காரம், வீடியோ, புகைப்பட ஆல்பம், விழாவுக்கு வரும் 50 பேருக்கும் முகக்கவசம், சானிடைசர், மண்டபத்தின் முகப்பில் வாழைமரம், ஆர்ச் இத்தனையையும் ஒன்றே முக்கால் லட்ச ரூபாயில் செய்து தருவதாக அறிவித்துள்ளது இந்த மண்டப நிர்வாகம்.
சமூகவலைதளங்களில் இதுதொடர்பான பதிவு வைரலாகி வரும் நிலையில், பி.டி.பிள்ளை மண்டபத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷிடம் இதுதொடர்பாக பேசினேன். “குமரி மாவட்டத்தில் உதயமான முதல் மண்டபம் இதுதான். இது எங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு. இந்த நேரத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடக்காமல் மண்டபம் வெறிச்சோடி இருப்பது மனதுக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.
இந்த மண்டபத்துக்கு சாதாரண காலங்களில் 50 ஆயிரம் வாடகை வாங்குவோம். இதுபோக, எங்களுக்கு வேறு இரு மண்டபங்களும் அருகருகே இருக்கிறது. இந்த பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் 50 பேரை மட்டுமே வைத்து திருமணங்களை நடத்தவேண்டும் என அரசு வழிகாட்டுகிறது. ஆனால், எத்தனை வீடுகளில் 50 பேர் இருக்கும் வசதி இருக்கிறது? உண்மையில் சொல்லப் போனால் வீடுகளுக்குள் தனிமனித இடைவெளிவிட்டு திருமணம் நடத்த சாத்தியமே இருக்காது. அதற்கு மாற்றாகத்தான் இப்படி ஒரு யோசனையை செய்தோம்.
இதன் மூலம் தனிமனித இடைவெளியையும் உறுதிசெய்ய முடியும். இன்னும் சொல்லப்போனால் மேடை அலங்காரக் கலைஞர்கள், சமையல் கலைஞர்கள், முகக்கவசம் தைக்கும் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், மேளக்கலைஞர்கள், மாலை கட்டும் தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்காணோர் மண்பத்துக்குள் நடக்கும் திருமணங்களின் மூலம் வேலைவாய்ப்பும் பெறுவார்கள்.
சமூக வலைதளத்தில் இந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு ஒரே நாளில் இருபதுக்கும் அதிகமானோர் அழைத்தார்கள். ஆனால் இதில் ஒரே ஒரு நிபந்தனை வைத்துள்ளோம்.
திருமணம் நடத்துபவர்கள் அதற்காக அரசாங்கத்திடம் உரிய அனுமதியை வாங்கிவிட்டுத்தான் எங்களை அணுகவேண்டும். மக்களிடம் இதற்கு இருக்கும் ஆதரவு மகிழ்ச்சியளித்தாலும், விதிகளுக்கு உட்பட்டு 50 பேரை மட்டும்தான் அழைப்பார்களா? என்ற பயமும் மிதமிஞ்சி இருக்கிறது. மண்டபங்களில்தான் தனிமனித இடைவெளியைச் சரியாக கடைப்பிடிக்க முடியும் என்பதால் அரசு மண்டபத்தில் நடக்கும் திருமணங்களையும் உரிய நிபந்தனைகளோடு அனுமதிக்க வேண்டும்” என்றார்.