

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இன்று காலை 516 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அதன்படி கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று 480 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 40.67 அடியாக உள்ளதால், வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கடந்த 30-ம் தேதி 25.70 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால், இன்று (ஜூன் 3) காலை அணையின் நீர்மட்டம் 30.55 அடியாக உயர்ந்தது. தற்போது அணையில் உள்ள 7 புதிய மதகுகள் பொருத்தும் பணிகள் நடந்து வருவதால், 31 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க முடியாது.
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 605 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 516 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், பாரூர் ஏரியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்ற காரணத்தால் வலது, இடதுபுறக்கால்வாய்களை அடைத்து, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.