

தமிழக உளவுத்துறை ஐஜியாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உளவுத்துறை ஐஜி பதவி மிக முக்கியமானது. காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு அடுத்து முதல்வருடன் நேரடியாகத் தொடர்பில் உள்ள முக்கியமான பதவி இன்டலிஜென்ட் எனப்படும் உளவுத்துறை பதவி. இது தவிர சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு, கியூ பிராஞ்ச் போன்ற துறைகள் மிக முக்கியமானவை.
உளவுத்துறை ஐஜி அந்தஸ்தில் உள்ள பதவியாக உள்ளது. அதன் ஐஜியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்குப்பின் ஐஜி அந்தஸ்தில் இருந்த சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின் சத்தியமூர்த்தி விடுப்பில் சென்றார்.
பின்னர் டேவிட்சன் தேவாசிர்வாதம் அப்பொறுப்பிற்கு வந்தார். பின்னர் அவரும் மாற்றப்பட்ட நிலையில் ஈஸ்வரமூர்த்தி சில மாதங்கள் உளவுத்துறை பொறுப்பைக் கவனித்து வந்தார். பின்னர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார். அவர் நாளை ஓய்வுபெறும் நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர், ஐஜி அந்தஸ்து அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். ஈஸ்வர மூர்த்தி அடிப்படையில் குரூப்-1 அதிகாரி ஆவார். 1998-ம் ஆண்டு அவர் ஐபிஎஸ் அதிகாரியாக தகுதி பெற்றார். பணியில் மிக நேர்மையான அதிகாரி ஆவார். அவர் எந்த அரசியல் கட்சிக்கும் வேண்டப்பட்டவராக இதுவரை இருந்தவர் இல்லை என்பது அவரது சிறப்பு.
அனைவருடனும் பண்பாகப் பழகக்கூடிய அதிகாரி. தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். முக்கியமாக உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை, சிபிஐ போன்ற பல முக்கியத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்படுவார் என ஊடகங்களில் கடந்த சில வாரங்களாக பெயர் அடிபட்ட நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவரது பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு.
அவர் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டாலும், தற்போது அவர் வகித்துவரும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பதவியையும் கூடுதலாகக் கவனிப்பார் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரமூர்த்தி இதுவரை வகித்து வந்த பதவிகள்:
1998- சிபிசிஐடி டிஎஸ்பி.
2000-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அங்கீகாரம்.
2000 டிசம்பர் - ஜூலை 2001 எஸ்பிசிஐடி -சிறப்புப் பிரிவு எஸ்பி
2001 ஜூலை- 2003 மே - மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை.
2003 மே - அக்டோபர் 2003 - எஸ்பி, எஸ்பிசிஐடி
2003 அக்டோபர் 2004 அக்டோபர்- தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்பி
2004 அக்டோபர் - 2005 செப்டம்பர்- நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் சென்னை.
2005 செப்டம்பர் - 2007 நவம்பர்- எஸ்பிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பி.
2007 நவம்பர் - 2012 ஆகஸ்ட் - சிபிஐ -எஸ்பி சென்னை
2012 நவம்பர் - 2014-ஜூன் - டிஐஜி - சிபிஐ சென்னை.
2014 ஜூன் - 2016 டிசம்பர் - உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு டிஐஜி.
2016 டிசம்பர் - 2019 ஜூன் - ஐஜி- உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு.
2019 ஜூன் - 2020 மே - மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர். சென்னை.
2020 மே - உளவுத்துறை ஐஜி/ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கூடுதல் பொறுப்பு.
குரூப்-1 அதிகாரியாக காவல் துறைக்கு வந்த இவர் 2023-ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெறுகிறார்.