தேசிய பொறியியல் நுழைவுத்தேர்வு பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க ராமதாஸ் கோரிக்கை

தேசிய பொறியியல் நுழைவுத்தேர்வு பரிந்துரையை  மத்திய அரசு நிராகரிக்க ராமதாஸ் கோரிக்கை
Updated on
2 min read

தேசிய பொறியியல் நுழைவுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால், அது ஊரக, ஏழை மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக நாடு தழுவிய அளவில் ஒற்றை பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை மத்திய அரசின் மனிதவளத்துறை விரைவில் ஏற்றுக் கொள்ளும் என்றும், இதனால் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கும்படி மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தான், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் செயலர் காவ் தலைமையிலான வல்லுநர் குழு இப்பரிந்துரையை வழங்கியுள்ளது.

இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது ஊரக, ஏழை மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் பொறியியல் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். தனியார் பயிற்சி மையங்களில் அதிக பணம் செலுத்தி படிக்கும் மாணவர்களால் மட்டுமே நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், பொறியியல் படிப்பு என்பது நகர்ப்புற, பணக்கார மாணவர்களுக்கானதாக மாறி விடும். இது உள்ளடக்கிய கல்வி வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது.

1980களில் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஊரக மாணவர்களுக்கு இந்தப் படிப்புகள் எட்டாக்கனியாக மாறின. இத்தகைய நுழைவுத்தேர்வுக்கு எதிராக பாமக தான் தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தியது.

அதன்பயனாக தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு தான் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேரும் ஊரக, ஏழை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இத்தகைய சூழலில் அதைத் தடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் பாமக அனுமதிக்காது.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக பரிந்துரை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப் பட்டதும், தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துமாறு அக்குழு பரிந்துரைத்திருப்பதும் கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்ட போது கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது கல்வி தொடர்பான கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42 ஆவது திருத்தத்தின் மூலம் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு கல்வி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் குறுக்கீடுகள் அதிகரித்து விட்டன.

ஒவ்வொரு மாநிலத்திலும் காணப்படும் சமூக, பொருளாதார, கல்விச் சூழலுக்கு ஏற்றவாறு கல்வித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கல்வி மாநிலப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால், நெருக்கடி நிலை காலத்தில் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு, கல்வி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு புதிது புதிதாக பொருந்தாத கொள்கை முடிவுகளை எடுத்து, அவற்றை செயல்படுத்தும்படி மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, மிகவும் ஆபத்தானதும் ஆகும்.

இதை அனைத்து மாநில அரசுகளும் மிகக்கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்த அணுகுமுறையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் சார்பில் சில கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டாலும், அடிப்படை கல்வியை வழங்கும் பணியை மாநில அரசுகள் தான் மேற்கொண்டிருக்கின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி வழங்கும் இயக்கம் போன்ற மத்திய அரசின் கல்வித் திட்டங்களைக் கூட மாநில அரசுகள் தான் செயல்படுத்தி வருகின்றன. எனவே, நுழைவுத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு போன்றவற்றில் முடிவெடுப்பதற்கான முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில், கல்வியை உலகத் தரம் கொண்டதாக மாற்றுதல், மாணவர்களின் வேலை பெறும் திறனை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக வேண்டுமானால் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இருந்து விட்டு போகட்டும்.

அதைவிடுத்து நுழைவுத் தேர்வு போன்றவற்றை மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது. இது குறித்த பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in