

விசாரணைக் கைதி ஒருவர் மூலம் இரு போலீஸாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, மதுரை திடீர்நகர் போலீஸார் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
மே 19-ல் இந்த காவல் நிலையத்திற்கு உட்பட மேலவாசல் பகுதியில் இரு தருப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
கரோனா காலத்தில் குற்றச்செயல் புரிவோர் கைது செய்யப்பட்டால் கிளைச் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இதன்படி, திடீர்நகர் காவல் நிலையத்தில் கைதானவர்களை 9 போலீஸார் தேனிக்கு அழைத்துச் சென்றனர்.
சிறையில் அடைக்கும் முன், விசாரணைக் கைதிகளுக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், தேனிக்கு எஸ்காட் சென்ற 6 போலீஸார் மற்றும் 19-ம் தேதி காவல் நிலையத்தில் பணியில் இருந்த 10 போலீஸார் என, 16 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
இதில் ஒரு மகளிர் காவலர், மற்றொரு ஆண் காவலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. எஞ்சியவர்களுக்கு நோய்த் தொற்று இல்லையென்றாலும், பாதிக்கப்பட்ட இரு காவலர் களால் பிற காவலர்கள், ஆய்வாளர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
தெற்குவாசல் காவல் நிலையத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டபோது, காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
காவல் நிலையமும் தற்காலிகமாக ஒரு வாரம் மூடப்பட்டு, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் திறக்கப்பட்டது. அதுபோன்று திடீர்நகர் காவல் நிலையத்திலும் பணிபுரியும் 45-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு தொற்று பரிசோதனை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போலீஸார் கூறுகையில், ‘‘விசாரணை கைதிகளை தேனிக்கு அழைத்துச் சென்றவர்கள், அன்றைய தினம் பணியில் இருந்தவர் களுக்கு நடத்திய சோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களை தவிர, காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சோதனை நடத்தவேண்டும். அறிகுறி இன்றி, கரோனா தொற்று பரவும் சூழலில் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற வாய்ப்பாக அமையும். மேலும், பலருக்கு பரவுவது தடுக்கப்படும்,’’ என்றனர்.
உதவி ஆணையர் வேணுகோபால் கூறுகையில், ‘‘ காவல் ஆணையர் ஆலோசனைபடி, பாதிக்கப்பட்ட இரு காவலர்களுடன் நெருக்கம், மிக நெருக்கம், உடல் உபாதைகள், 50 வயதினர் என, பட்டியல் தயாரித்து சுகாதாரத்துறை அறிவுரைப்படி சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினியால் காவல் நிலையம் சுத்தம் செய்யப்படும்,’’ என்றார்.