5-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?- மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கை தொடர்வதா?, தளர்வுகள் என்ன மாவட்ட வாரியாக உள்ள பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா முழுதும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பெருகி வரும் நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளும் 4-ம் கட்ட ஊரடங்கில் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் தமிழகத்தின் கரோனா தொற்றில் 65 சதவீதம் சென்னையில் உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் சென்னையின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாட்களுக்கு முன் நடந்தது.
கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் உட்பட 19 மருத்துவ நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு ஊரடங்கு முடியும்போதும் ஆய்வறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கின்றனர். இம்முறை முதல்வருடன் ஆலோசனை நடத்திய அவர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறை ஆலோசனைக்குப்பின் பேட்டி அளிக்கும் மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் இம்முறை அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக மாவட்ட வாரியாக ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு ஊரடங்கு காலம் முடியும்போதும் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம். மாவட்ட அளவில் உள்ள தொற்று நோய் நிலைமை, தொற்றுத்தடுப்புப்பணி, ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அலசப்படும். இதில் தற்போது புதிய சவாலாக வெலி மாநிலங்களிலிருந்து வரும் நபர்களால் தொற்று அதிகரித்து வருவதால் அதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
4-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, மேலும் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்து முதல்வர் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளார்.
