‘ஒரு காவலர் ஒரு குடும்பம்’- பெண் அதிகாரி உதவிக்கரம்

‘ஒரு காவலர் ஒரு குடும்பம்’- பெண் அதிகாரி உதவிக்கரம்
Updated on
1 min read

ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், மதுரை அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ‘ஒரு காவலர் - ஒரு குடும்பம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

இத்திட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். உணவுக்கு வழியின்றி தவிக்கும் குடும்பங்களைக் கண்டறிந்து, ஒரு மாதத்துக்கான அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி வருகின்றனர். கரும்பாலை, எஸ்எம்பி காலனி, வண்டியூர் தீர்த்தக்காடு, செம்மண் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இவர்களால் பயனடைந்துள்ளனர். கடந்த 60 நாட்களில் 2,675 குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

ஊரடங்கு பாதுகாப்புப் பணி, அலுவலகப் பணி, குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே சேவை பணியிலும் ஈடுபடும் லில்லி கிரேஸை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்த மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஊக்கமளித்தார். காவலர்கள், அறக்கட்டளைகள், ரோட்டரி சங்கம் மூலம் நிதி உதவி கிடைத்தது. எங்களின் முயற்சியை பாராட்டி உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

சாலையோரத்தில் ஆதரவின்றி தவித்த 650 பேரை மீட்டு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக பராமரிப்பில் தங்க வைத்துள்ளோம். அவர்களில் சிலரை அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in