

தென்மாவட்டங்களில் இருந்து மகராஷ்டிரா மாநிலத்திற்கு புலம் பெயர்ந்து வேலைக்குச் சென்ற சுமார் 1400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
கரோனா தடுப்புக்கான பொது ஊரடங்கால் தமிழகத்தில் புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களும், தமிழகப் பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றவர்களும் விருப்பத்தின்பேரில் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
மதுரை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர்கள் மதுரையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் பிகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று பீகாரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் கடந்த வாரம் தென்மாவட்டத்திற்கு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து, மதுரை, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகராஷ்டிராவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உன்று மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
குடும்பத்தினருடன் மதுரை வந்த அவர்களை சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது. அவர்களுக்கு ரயில் நிலையத்திலேயே தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறி ஆய்வு செய்யப்பட்டது. ஊருக்கு சென்றாலும், சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்கவேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுரைகளை கூறி அனுப்பினர்.