

மதுரை மத்திய சிறையில் இரண்டு கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியானது.
கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடந்த மத்திய சிறை கைதிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் ஒவ்வொரு சிறையில் இருந்தும் தலா 5 பேர் பங்கேற்றனர்.
பயிற்சி முடிந்து திரும்பியவர்களுக்கு சமீபத்தில் கரேனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. திருச்சி, கடலூரைச் சேர்ந்த தலா இரு கைதிகளுக்கு தொற்று இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் பயிற்சியில் பங்கேற்ற கைதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் மதுரை மத்திய சிறையில் இருவருக்கும், பாளையங்கோட்டை சிறையில் மூன்று கைதிகளுக்கும் தொற்று உறுதியானதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து இரு சிறையிலும் பயிற்சியில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் மதுரை போலீஸாருக்கு தொற்றிய கரோனா:
கடந்த 19-ம் தேதி மதுரை திடீர்நகர் பகுதியில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேனி கிளைச் சிறையில் அடைக்க திடீர்நகர் போலீஸார் 9 பேர் இரு குழுவாக அழைத்துச் சென்றனர்.
குற்றச் செயல்புரிந்தவர்களை ஆய்வு செய்தபோது, ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதன் காரணமாக தேனிக்கு சென்ற 9 போலீஸார் மற்றும் அன்றைய தினம் திடீர்நகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த 10 போலீஸாருக்கும் ஆய்வு செய்தனர்.
இதில் இரு போலீஸாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை நகரில் ஏற்கெனவே தீயணைப்பு வீரர், சிறப்பு எஸ்ஐ, போக்குவரத்து காவலருக்கு தொற்று உறுதி செய்து, சிகிச்சைபின், வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.