

ஓசூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோடை உழவுப்பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் வட்டத்தில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி அபிவிருத்தி திட்ட தொகுப்பு கிராமங்களில் ஒன்றான பஞ்சாட்சிபுரம் கிராமத்தில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் கோடை உழவுப் பணிகளை வேளாண் இணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோடை உழவின் அவசியம் பற்றியும், பிரதம மந்திரி கிஸான் திட்டம் பற்றியும், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் பற்றியும், அதற்கு அரசு வழங்கும் மானியம் பற்றியும் அப்பகுதி விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பாகலூர் உள்வட்டத்தில் உள்ள மூர்த்திகானதின்னா கிராமத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தில் அமைக்கப்பட்டுள்ள துவரை சாகுபடி வயலைப் பார்வையிட்டார்.
மேலும் அப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்று பிரதம மந்திரி கிஸான் திட்டம் பற்றியும், பயிர் சாகுபடிப் பரப்பு தொடர்பான மின்னணு அடங்கல் முறையில் பதிவு செய்யும் முறைகள் பற்றியும் ஆய்வு செய்தார். முன்னதாக ஓசூர் வட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வருகை தந்த இணை இயக்குனர், அங்கு வேளாண்மை துறையில் உள்ள அனைத்து திட்டங்கள் தொடர்பான பதிவேடுகளையும், கிடங்கில் காரீப் பருவம் மற்றும் மானாவாரி திட்டத்துக்கான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் தரமானதா என்பதை உறுதி செய்யும் வகையில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலேயே விதை முளைப்புத் திறன் ஆய்வு செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பணியின் போது ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், வேளாண்மை அலுவலர் ரேணுகா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.