

மதுரையில் அடிதடி வழக்கில் சிக்கிய ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிந்ததால், அவரை அழைத்துச் சென்ற போலீஸாருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை திடீர்நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி அடிதடி வழக்கில் ஒன்றில் 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை 4 மற்றும் 5 பேர் கொண்ட இரு குழுவாக பிரித்து திடீர்நகர் போலீஸார் தேனி சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
சிறையில் அடைக்கும் முன்பு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், குற்றச் செயல் புரிந்தோரை தேனிக்கு அழைத்துச் சென்ற 8 போலீஸார் உட்பட காவல் நிலையத்தில் பணியில் இருந்த 16-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு கரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ள காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர் வாதம் உத்தரவிட்டார்.
இவர்களுக்கு இன்று திடீர்நகர் காவல் நிலையம் அருகிலுள்ள அறையில் வைத்து மருத்துவக் குழுவினர் தொற்றுக்கான மாதிரிகளை சேகரித்தனர். இதற்கான முடிவு இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் எனப் போலீஸார் தெரிவித்தனர்.