’நம் நாட்டின் கடைசி மன்னர்’- சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் உருக்கமான இரங்கல்

’நம் நாட்டின் கடைசி மன்னர்’- சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் உருக்கமான இரங்கல்
Updated on
2 min read

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். தமிழகத்தில் கடைசியாக முடிசூட்டிக் கொண்ட குறுநில மன்னர் என்பதால் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘சீமராஜா’ படத்தில் இதே சிங்கம்பட்டி ராஜாவாக நடிகர் நெப்போலியன் நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சிங்கம்பட்டி ஜமீனில்தான் நடத்தப்பட்டன என்பதால் அந்த சமயங்களில் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியுடன் நெப்போலியனுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜமீன்தார் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்ட நெப்போலியன் அமெரிக்காவில் இருந்தபடியே இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதில் நெப்போலியன் கூறியிருப்பதாவது:

''திருநெல்வேலியைச் சேர்ந்த எனது ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன், சிங்கம்பட்டி ஜமீன் ராஜா இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் மனது பதைபதைத்தது. நமது ராஜா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். உயரிய எண்ணமும் தன்னம்பிக்கையும் இறையருளும் கொண்ட ஜமீன் ஐயாவின் மறைவு நம் தமிழ்நாட்டிற்கே மிகப் பெரிய இழப்பாகும்.

நம் நாட்டின் கடைசி மன்னர் அவர். அவர் பல சாதனைகள் செய்து வரலாற்றில் தனது வாழ்க்கையைப் பதியவைத்துவிட்டுச் சென்றுள்ளார். மன்னரின் மறைவு நம் மக்களுக்குப் பெரும் துயராகும்; பேரிடியாகும். அவரை இழந்து வாடும் சிங்கம்பட்டி ஜமீன் மக்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்ல என்னால் நேரில் அங்கு வரமுடியவில்லை என்பதால் எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் அமெரிக்காவில் இருந்து மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். .

இந்தத் தருணத்தில் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பையும் நட்பையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அன்புச் சகோதரர் சிவகார்த்திகேயனோடு ‘சீமராஜா’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனாக மறைந்த மன்னரைப் போன்று வேடமேற்று நடித்த பெருமை எனக்குக் கிடைத்தது. அந்தத் திரைப்படத்தை சிங்கம்பட்டி அரண்மனையிலேயே படம் பிடித்தோம். படப்பிடிப்பின் முதல் நாள் அன்று காலையிலேயே அவரைச் சந்தித்து முதலில் ஆசிர்வாதம் வாங்கினேன்.

அப்பொழுது அவரிடம் ‘இந்தப் படத்தில் உங்களைப் போன்று ராஜா வேடமிட்டு நடிக்கிறேன்’ என்ன கூறினேன். ‘நீ ராஜா மாதிரிதான் இருக்கிறாய்... நல்ல பொருத்தமாக இருக்கிறது. நீ நன்றாக நடிப்பாய்’ என்று என்னை மனதார வாழ்த்தினார் ராஜா. உடனே, அருகில் இருந்த அவரது உதவியாளர் ஒருவர் ‘உங்களுக்கு ராஜ திருஷ்டி கிடைத்துவிட்டது- ராஜாவே சொன்னதால்’ என்று சொன்னார். உடனே ராஜாவும், ‘ஆமாம் ஆமாம்... என் கண்ணு படக்கூடாது, பட்டுவிட்டது. அதனால் உனக்கு இன்று இரவு உடல் நிலையில் சற்று பாதிப்பு ஏற்படும். ஆனால், பயப்பட வேண்டாம், நாளை ஒருநாளில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஒரு மந்திரம் சொல்லி என்னை ஆசிர்வாதம் செய்தார்.

நானும் ஏதோ சும்மா விளையாட்டுக்குத்தான் கூறுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு நடிக்கச் சென்றுவிட்டேன். மாலையில் படப்பிடிப்புக் குழுவினருடன் நாங்கள் அனைவரும், திருநெல்வேலி விடுதிக்கு வேலை முடிந்தவுடன் சென்றுவிட்டோம். மன்னர் சொன்னது போலவே அன்று இரவு எனக்கு 103 டிகிரி காய்ச்சல் வந்துவிட்டது. ஆனால், அடுத்த நாள் காலையில் அவர் சொன்னது போல சரியாகிவிட்டது.

நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன்

இதை உணர்ந்து நான் வியந்தேன். மன்னருக்குள் உண்மையில் ஏதோ ஒரு தெய்வசக்தி உள்ளது என்று மட்டும் புரிந்துகொண்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவம் என் மனதில் இப்பொழுதும் வந்து நிழலாடுகிறது. எப்பொழுதும் என்னால் மறக்க முடியாத நிகழ்வு அது.

திரைப்படத்தில் ஒரு மாதம் ராஜா வேடமிட்டு நடித்ததற்கே எனக்குப் பேரும் புகழும் கிடைத்தது என்றால்... நிஜமான அந்த ராஜாவுக்குக் கிடைக்கின்ற புகழ் காலத்தால் அழிக்க முடியாதது. ஐயாவின் புகழ் வாழ்க. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்''/

இவ்வாறு நடிகர் நெப்போலியன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் ராஜா முருகதாஸ் தீர்த்தபதிக்கு 2 மகன்கள் 3 மகள்கள். மூத்த மகள் அபராஜிதா சிவகங்கை சமஸ்தானத்து ராணி ஆவார். அபராஜிதாவின் மகள் மதுராந்தகி நாச்சியாரின் ஆளுகைக்குள்தான் இப்போது சிவகங்கை சமஸ்தானம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in