பட்டியல் இனமக்களுக்கு எதிராகப் பேசவில்லை என்றால் திமுகவினர் முன்ஜாமீன் பெறுவது ஏன்?- அமைச்சர் செல்லூர் ராஜூ

பட்டியல் இனமக்களுக்கு எதிராகப் பேசவில்லை என்றால் திமுகவினர் முன்ஜாமீன் பெறுவது ஏன்?- அமைச்சர் செல்லூர் ராஜூ
Updated on
1 min read

பட்டியல் இனமக்களுக்கு எதிராக திமுகவினர் பேசவில்லை என்றால் திமுகவினர் முன்ஜாமீன் கோருவது ஏன் என அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வினவினார்.

மதுரையில் கிராமியக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மதுரை நகரில் அதிமுக சார்பில், கிராமிய, நடனக் கலைஞர்கள், மேடைக் கலைஞர்களுக்கு அனைத்துப் பிரிவினருக்கும் உணவுப் பொருட்கள் வழங்குகிறோம்.

ஊழல் பற்றியெல்லாம் திமுக பேசுகிறது. 2ஜி பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு பற்றி பயப்படாதவர்கள் தானே திமுகவினர். அந்தக் கட்சியிலுள்ள கனிமொழி எம்.பி, ஆ.ராசா போன்றவர்கள் 6 மாதம் சிறை சென்றவர்கள். பட்டியல் இன மக்களுக்கு எதிராக திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசினாரா இல்லையா? என, முக.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் எதற்காக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக ஊழலை வெளிக்கொண்டு வர திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது என, திமுக கூறுகிறது. ஊழல் நிறைந்த கட்சி திமுக தானே. அவர்கள் ஊழல் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.

அதிமுகவில் யார் ஊழல் செய்தாலும், நாங்களே அடையாளம் காட்டுவோம். நலத்திட்ட உதவிக்கென பல இடங்களில் ரைஸ்மில் உரிமையாளர்கள், மொத்த அரிசி வியாபாரிகளை மிரட்டி, ரவுடித்தனம் செய்து உணவுப் பொருட்களை வாங்குகின்றனர்.

இது தொடர்பாக போலீஸில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

திமுக யோக்கியமா என, அக்கட்சி தலைவர்களுகேத் தெரியும். கரோனா நிவாரணம் குறித்த திமுகவின் இலவச அழைப்புக்கு அதிக அழைப்புகள் வருகிறது என்பதெல்லாம் அவர்களது தொழில்நுட்ப பிரிவு செய்யும் வேலை.

இது திமுக நடத்தும் நாடகம். அனைத்து மாவட்டத்திலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் முடிந்தளவு நிவாரணம் வழங்குகின்றனர்.

நாங்கள் கொடுத்து சிவந்த கரங்கள் கொண்டவர்கள். திமுக அது போன்ற செய்ய முடியுமா? கரோனா தடுப்பு குறித்து தமிழக அரசின் நடவடிக்கைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு திமுகவால் கூறமுடியுமா?

மத்திய அரசு வழங்கும் ரேசன் மானியத்தை வழங்காத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in