மதுரையில் கரோனா தடுப்பு சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குஜராத்தில் இருந்து திரும்பிய தொழிலாளி மரணம்
குஜராத்தில் இருந்து திரும்பிய தொழிலாளி ஒருவர், மதுரை அருகே கரோனா தடுப்புக்கான சிறப்பு முகாமில் தங்கி இருந்த போது, உயிரிழந்தார்.
கரோனா தடுப்புக்கான ஊரடங்கால் வெளி மாநிலங்களில் பணி புரிந்த தமிழகத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
இவர்கள் சிறப்பு முகாம்களில் ஒரு வாரத்திற்கு மேல் தங்க வைக்கப்பட்டு, கரோனா நோய் தொற்று அறிகுறி ஆய்வுக்குபின், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி குஜராத் மாநிலத்தில் இருந்து மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை உட்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் மதுரை வந்தனர்.
இவர்களில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள கல்லூரணியைச் சேர்ந்த முத்து ராமலிங்கம்(68) என்பவர் உட்பட 70 பேர் மதுரை பெருங்குடி அருகிலுள்ள சின்னஉடைப்பு பகுதியிலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் இன்று அதிகாலை முத்து ராமலிங்கத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. 108 ஆம் புலன்ஸ் மூலம் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனாலும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கரோனா பாதித்து உயிரிழந்திருக்கலாம் என, முதலில் சந்தேகம் எழுந்தது.
இருப்பினும், ஏற்கனவே முகாமில் எடுத்த மருத்துவப் பரிசோதனை மாதிரி ஆய்வில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என, தெரிந்தது என்றும், முச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்பு முன்பே அவருக்கு இருந்ததாகவும் சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முத்துராமலிங்கம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்தவர் எனத் தெரியவந்தது.
