

மதுரையிலுள்ள தமிழ்நாடு நாடக நடிகர் சங்க தலைவர் ஜெயம், செயலர் முருகதாஸ், பொருளாளர் எஸ்கேஎம். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை உட்பட 4 மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான காமராஜிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
மதுரையில் இசை, நாடகத்தை தொழிலாக கொண்டு செயல்படும் இச்சங்கம் 97 ஆண்டுகளை கடந்துள்ளது. கரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் இசை, நாடகத் தொழில் முடக்கம் ஏற்பட்டு 60 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
ஆண்டில் 6 மாதம் மட்டுமே நாடகத் தொழில் நடக்கும். மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றன. எங்களது வாழ்வாதாரமும் இத்தொழிலில் அடங்கியுள்ளது.
தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தி, பல்வேறு தொழில் களை நடத்துவதற்கு அனுமதி அளித்து அனைத்து மக்களும் வாழ வழிவகை செய்துள்ளது. இந்த நேரத்தில் எங்களது இசை நாடகம், நாட்டுப்புற கலைஞர்களையும் தொழில் புரிய அனு மதிக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதே போன்று மதுரை ஆட்சியர் டிஜி. வினயிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.