100 நாள் வேலை கேட்டுப் போராடிய பெண்கள்: பயத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை

100 நாள் வேலை கேட்டுப் போராடிய பெண்கள்: பயத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை
Updated on
1 min read

பொதுமுடக்கம் காரணமாக, கிராமப்புற மக்கள் வேலையும், வருமானமும் இல்லாமல் தவிக்கிறார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும் அல்லது அவர்களுக்குரிய சம்பளத்தை முன்பணமாகத் தர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன.

இந்த நிலையில், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேலை கேட்டு சுமார் 600 தொழிலாளர்கள் மனு கொடுத்திருந்தனர். ஆனால், அதில் 100 பேருக்குக்கூட வேலை வழங்கப்படவில்லை. பொதுமுடக்கத்தால் மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட கிராமப்புறப் பெண்கள் வேலையுறுதித் திட்டத்தில் அனைவருக்கும் வேலையளிக்க வேண்டும் என்று கோருவதற்காக இன்று வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நோக்கி பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி கிராமங்களில் இருந்து புறப்பட்ட அவர்கள், வழியில் வாடிப்பட்டி ஜவுளி பூங்கா அருகே உள்ள டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எங்கே கடையை சூறையாடி விடுவார்களோ என்று பயந்த டாஸ்மாக் ஊழியர்கள் வேகவேகமாகக் கடையை அடைத்தார்கள். இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து, பெண்களைக் கலைந்து போகச் சொன்னார்கள்.

வேலை கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப் போவதாக அவர்கள் சொன்னதைத் தொடர்ந்து, சங்கத்தின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஈஸ்வரி, மாநிலக் குழு உறுப்பினர் பம்பையம்மாள், வட்டாரத் தலைவர் முத்துராக்கு மற்றும் சந்திரா (கச்சைகட்டி), பகவதி, பேச்சி (குட்லாடம்பட்டி) ஆகியோரை மட்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர்.

அனைவருக்கும் வேலை, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை மறுக்கக் கூடாது, வேலை அளிக்கவில்லை என்றாலும் கூட, கரோனா நிவாரணமாகக் கூலி வழங்க வேண்டும், ஒவ்வொரு வாரமும் கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பெண்கள் வலியுறுத்தினர்.

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று அதிகாரி உறுதியளித்ததன் பேரில் பெண்கள் அனைவரும் ஊர் திரும்பினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in