

உம்பன் புயல் கரையை கடக்கும்போது, ஏற்படும் கடல் கொந்தளிப்பை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ யாரும் செல்லக்கூடாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கரோனா தடுப்பு சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அவர் வழங்கினார்.
அதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகளவில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் வழிகாட்டுதலில் அதிகாரிகள் துரிதமாக செயல்படுகின்றனர். இதனால் நோய் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதத்தை சவால் எதிர்கொண்டு குறைத்து இருக்கிறோம்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்மாதிரி யாக செயல்படுகின்றனர்.
அத்தியாவசியத் தேவையை பொறுத்து உள்மாவட்டத்திற்குள் வாகனங்களில் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றாலும், மாவட்டம்விட்டு, மாவட்டம் செல்ல அனுமதி பெறவேண்டும்.
கரோனா தடுப்பு, மீட்பு நடவடிக் கையில் இந்தியாவிலேயே முன்மாதிரி,எளிய முறையில் நமது முதல்வர் செயல்படுகிறார். தமிழகத்தில் பொருளாதாரம், தொழில்துறையை மேம்படுத்த ரங்கராஜன் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான உம்பன் சூப்பர் புயல் வலுவிழுந்து நமது பகுதியைவிட்டு 500 கி.மீ., தூரத்தில் கடக்கிறது என, வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி, லட்சத்தீவு போன்ற இடங்களில் பலத்த காற்று வீசும் என்பதால் கடலுக்குள் செல்லவேண்டாம் என, மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியா குமரி 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் முன்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் நமது பகுதியை இன்று கடப்பதால் மக்கள் அச்சமடையவேண்டாம்.
ஆனாலும், தற்போது புயல் கரையை கடக்கும் நேரம் என்பதால் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை ஆய்வு மையம் சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும்.
அதன் அடிப்படையில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். புயல் கரையை கடக்கும்போது, ஏற்படும் கடல் கொந்தளிப்பை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ யாரும் செல்லக்கூடாது.
ஊரடங்கால் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என, எச்சரித்துள்ளோம். கடலோர மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பு நடவடிக்கைக்கு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.