புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் ஏற்கெனவே 6 பேர், கேரளா கண்ணூர் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி கென்னடி கார்டன் பகுதியை சேர்ந்த இளைஞர், காரைக்காலில் ஒருவர் என 8 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 10 பேர் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர்.

ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது அபுதாபியில் இருந்து புதுச்சேரி திரும்பிய தந்தை, மகன் இருவருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூர் பைபாஸ் சாலையைச் சேர்ந்த 36 வயது இளைஞருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் 3 பேரும், கோவிட் மருத்துவமனையான கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாஹேவைச் சேர்ந்த அபுதாபியில் இருந்து வந்த நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மாஹே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பண்டா, இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் இன்று (மே 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது அபுதாபியில் இருந்து வந்த லாஸ்பேட்டையைச் சேர்ந்த தந்தை, மகன் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் நபர் ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் 3 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி மாஹேவைச் சேர்ந்த அபுதாபியில் இருந்து வந்த நபர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏற்கெனவே புதுச்சேரி கென்னடி கார்டன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கேரளா கண்ணூர் அரசு மருத்துவமனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நெகட்டிவ் வந்துள்ளது. காரைக்காலில் துபாயில் இருந்து வந்த இளம்பெண்ணும் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளார்.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை 12 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஆக மொத்தம் 17 பேர் புதுச்சேரி மாநிலத்தில் சிகிச்சை பெறுகின்றனர். 10 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in