

தமிழகம் முழுவதும் அதிமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் பதவிகள் ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளில் கிளைக் கழகச் செயலாளர்கள் பதவி என்பது கட்சியின் அடிமட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முக்கியப் பதவி. இதனால் திராவிடக் கட்சிகளில் கிளைக் கழகச் செயலாளர்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்த நிலையில், அதிமுகவில் கிளைக் கழகச் செயலாளர்களுக்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்கும் இடையில் ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் என்ற பதவி ஜெயலலிதா காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் செயலாளர் பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று ஒரே அறிவிப்பின் மூலம் அதிமுக ஊராட்சி கழகச் செயலாளர்கள் பதவிகள் அத்தனையும் கலைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி என்னவென்று தெரியாத நிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஊராட்சிச் செயலாளர்களுக்கு மாற்றுப் பதவிகள் வழங்கப்படும் என்றும் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊராட்சி செயலாளர் பதவிகள் கலைக்கப்பட்ட விவகாரம் கட்சியினர் மத்தியில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு கிளைக் கழகச் செயலாளர்கள் பதவிகள் பறிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.
இதற்கு விளக்கமளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “கட்சியில் ஊராட்சி செயலாளர் பதவி என்பது இடையில் கொண்டுவரப்பட்டது. இதனால் கிளைக்கழகச் செயலாளர்களுக்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்கும் இடையில் தொடர்புகள் குறைந்து வருவதாக கருதினோம். ஊராட்சிக் கழகச் செயலாளர் பதவிகள் தேவை இல்லை என்பது கட்சியினரின் நீண்டகால கோரிக்கையாகவும் இருந்துவந்தது. அதனால்தான் ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் பதவிகளை ரத்து செய்துள்ளோம். கிளைக் கழகச் செயலாளர் என்பது வேறு ஊராட்சிக் கழகச் செயலாளர் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்
இதேபோல், ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் இன்று வெளியிட்டிருக்கும் இன்னொரு அறிவிப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், சென்னை மண்டலத்துக்கு அஸ்பயர் சுவாமிநாதனும், வேலூர் மண்டலத்துக்கு சத்யனும், கோவை மண்டலத்துக்கு சிங்கை ராமச்சந்திரனும் மதுரை மண்டலத்துக்கு மதுரை அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவுக்கு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, அஸ்பயர் சுவாமிநாதனும், ராஜ் சத்யனும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்களில் சுவாமிநாதன் ஓபிஎஸ் ஆதரவாளர். ராஜ் சத்யன் ஈபிஎஸ் ஆதரவாளர். இதனால் அதிமுக தொழில்நுட்பப் பிரிவுக்குள் தேவையற்ற குழப்பங்கள் நடந்ததாகத் தெரிகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே அதிமுக தொழில்நுட்பப் பிரிவானது நான்கு மண்டலாகப் பிரிக்கப்பட்டு அவரவர்களுக்கு செல்வாக்கான மண்டலங்களில் அவரவர்களே பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ டீம் தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுகவில் ஊராட்சிக் கழகச் செயலாளர் பதவிகளை கலைத்திருப்பதும், கட்சியின் தொழில் நுட்பப் பிரிவு திருத்தி அமைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு ஊகங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.