

புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் கோரிக்கைளை மத்திய அரசு அலட்சியப்படுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று நாடு தழுவிய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாகக் கோவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தின் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார், மாநிலப் பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆறுமுகம், முன்னிலை வகித்தார். இதில் மாவட்டப் பொருளாளர் யூ.கே.சுப்பிரமணியம், சி.தங்கவேலு, ஆர்.ஏ.கோவிந்தராஜன், சி.வி.சுப்பிரமணியன், கே.வெங்கடாசலம், ஏ.பி.மணிபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தனிமனித விலகலைக் கடைப்பிடித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:
''புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பயண வழியில் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். கரோனா கால நெருக்கடிகளைச் சமாளிக்க தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தைச் சீர்குலைக்கக் கூடாது. 50 வயதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கக் கூடாது.
ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை அதிகரிக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதைத் திருத்தி, வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
நகர்ப்புற மக்களுக்கும் வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் நிபந்தனைகள் இல்லாமல் அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி சீர்குலைக்கக் கூடாது. வேலையைவிட்டு மூன்றாண்டுகளுக்கு நிறுத்திவைப்பது அல்லது பணிநீக்கம் செய்வது என்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்குப் புத்துயிரூட்டும் வகையில், கடன்களுக்கான மூன்று மாதத் தவணைத் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கரோனா முடக்க காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைப்படி விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், ஓய்வூதியம் பெற்று வரும் முதியோர், விதவையர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் போன்றோருக்குக் கரோனா கால நிவாரண நிதியும், உணவுப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும்''.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டன.