

துப்புரவுப் பணியாளர்கள் என்பது தூய்மைப் பணியாளர்கள் என்று தமிழக அரசால் மாற்றப்பட்டதும், தொற்றுநோய்க் காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி எத்தனை உன்னதமானது என்பதை உணர்ந்திருக்கும் மக்கள் அவர்களை அரவணைத்து மதிப்பளிப்பதும் கரோனா யுகத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்.
இந்தச் சூழலில், ‘தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை அவமதிக்கும் விதத்தில், அவர்களைக் குப்பை லாரியில் அமர வைத்து அழைத்துச் செல்கிறார்கள். அதைத் தவிர்த்து அவர்களை உரிய வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடத் தமிழர் கட்சி என்ற அமைப்பினர் தமிழ்ரவி என்பவர் தலைமையில் இந்த மனுவை ஆட்சியரிடம் அளித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசிய தமிழ்ரவி, “தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரிகிறார்கள். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில், பணியின்போது இறந்த ஒரு தூய்மைப் பணியாளரின் உடலைக் குப்பை வண்டியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இது தூய்மைப் பணியாளர்களை அவமதிக்கும் செயல். அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களைக் குப்பை வண்டியில் அமரவைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
கோவை மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குப்பை வண்டிகளிலேயே தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை உரிய பாதுகாப்பான வாகனத்தில் அழைத்துச் செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும். கரோனா காலத்தில் வங்கிகள், சுயஉதவிக் குழுக்கள் கடனை வசூலிக்கக் கூடாது என்று மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், சுய உதவிக் குழுக்களின் பெயரில் இயங்கிவரும் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள், அருந்தியர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டாயப்படுத்தி கடன் வசூலில் ஈடுபடுகிறார்கள். பணம் தர முடியாத நிலையில் உள்ளவர்களைக் குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள். எனவே, இப்படியான நிறுவனங்கள் மீதும், நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த ஊழியர்களாகவே பணியாற்றுகின்றனர். அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் இவர்கள் அளித்திருக்கும் கோரிக்கை மனு, தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!