மாற்றுத்திறனாளி கணவரைப் பார்க்க மேலூரில் இருந்து ஈரோட்டுக்கு மகளுடன் நடந்து செல்ல முயன்ற மனைவி; செஞ்சிலுவைச் சங்கம் மீட்டு உதவி

மாற்றுத்திறனாளி கணவரைப் பார்க்க மேலூரில் இருந்து ஈரோட்டுக்கு மகளுடன் நடந்து செல்ல முயன்ற மனைவி; செஞ்சிலுவைச் சங்கம் மீட்டு உதவி
Updated on
1 min read

ஊரடங்கால் 3 மாதமாக ஊருக்கு வராத மாற்றுத்திறனாளி கணவரைப் பார்க்க மகளுடன் ஈரோட்டிற்கு நடந்து சென்ற பெண்ணை மீட்டுத் தேவையான உதவிகளை செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது.

மேலூர், கீழ செவல்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களின் மகள் நித்யா. சிவக்குமார் ஈரோட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். மாதம் ஒரு முறை ஈரோட்டில் இருந்து மேலூர் வந்து மனைவி, மகளைப் பார்த்துச் செல்வது வழக்கம். ஊரடங்கு உத்தரவால் சிவக்குமார் கடந்த 3 மாதமாக மேலூருக்கு வரவில்லை.

இதையடுத்து சிவக்குமாரைப் பார்ப்பதற்காக மேலூரில் இருந்து நடந்தே ஈரோட்டிற்கு செல்ல முத்துலெட்சுமி முடிவு செய்து நடக்கத் தொடங்கினார். மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த முத்துலெட்சுமியை வாடிப்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸார் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் இருவரையும் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தத் தகவல் தெரிந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடர்புகொண்டு முத்துலட்சுமிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். செஞ்சிலுவைச் சங்கச் செயலர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார், சேதுக்கரசி, விமல் ஆகியோர் முத்துலட்சுமியையும், அவரது மகளையும் மதுரை யாதவா கல்லூரியில் இரவில் தங்க வைத்து உணவு வழங்கினர்.

இன்று காலை இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தி ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் மேலூர் கீழசெவல்பட்டியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஈரோட்டில் பணிபுரியும் சிவக்குமாரை கீழசெவல்பட்டிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in