

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களை வழங்கியும் விழிப்புணர்வூட்டும் பணிகளிலும் ஈடுபட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் குமரி மாவட்ட பாஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீர் தயாரித்து இலவசமாக விநியோகித்து வந்தனர். அடுத்ததாக இப்போது பொதுவான வைரஸ் நோய் எதிர்ப்புக்கான ஹோமியோபதி தடுப்பு மாத்திரைகளை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.
இன்று மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளை விநியோகித்துக் கொண்டிருந்த ராஜாக்கமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் சகிலா ஆறுமுகம் இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக மக்களுக்கான பல்வேறு நிவாரணப் பணிகளை பாஜகவினரும் செய்து வருகிறோம். குறிப்பாக, பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கபசுரக் குடிநீர் விநியோகித்தோம். இப்போது அதன் தொடர்ச்சியாக ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கி வருகிறோம்.
நாங்கம் வழங்கும் இந்த ஒரு பொட்டலத்தில் ஐந்து பேருக்கான மாத்திரைகள் இருக்கும். இந்த மாத்திரைகளை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களும்கூடச் சாப்பிடலாம். காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக வாயை நன்றாகக் கொப்பளித்துவிட்டு, 4 மாத்திரைகளை வாயில் போட்டு மிட்டாய் போல் சுவைத்துச் சாப்பிடலாம். இப்படி நான்கு நாள்கள் தொடர்ந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும்; கரோனா நம்மை அண்டாது’’ என்றார்.