சோழவந்தானில் பிறந்து 5 நாளே ஆன பெண் சிசு மரணத்தில் சந்தேகம்? உடல் தோண்டி எடுத்துப் பரிசோதனை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சோழவந்தானில் பிறந்து 5 நாளே ஆன பெண் சிசு மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் உடல் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்த தம்பதியர் தவமணி, சித்ரா. இவர்கள் கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சித்ரா மீண்டும் கர்ப்பிணியானார். கடந்த 10-ம் தேதி சோழவந்தானிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

வீடு திரும்பிய நிலையில், பிறந்த குழந்தை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மேல் திடீரென உயிரிழந்தாகத் தெரிகிறது. குழந்தையின் உடலை தவமணி குடும்பத்தினர் சோழவந்தானிலுள்ள காவல் துறையினருக்கான பழைய குடியிருப்பு அருகே வைகை ஆற்றாங்கரையில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் தவமணி, சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்தபோதிலும், நான்காவதும் பெண் குழந்தை என்பதால் ‘சிசு’ மரணம் செய்திருக்கலாம் என, சிலருக்கு சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் சமயன் நேற்று காலை சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா பாய் வழக்குப் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் குழு மூலம் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சிசு மரணமா அல்லது உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை இறந்ததா என்பது தெரியவரும்.

சிசு கொலை எனில் தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in