புதுச்சேரியில் சிக்கித் தவித்த கேரள மாணவர்கள் 50 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

புதுச்சேரியில் சிக்கியிருந்த கேரள மாணவர்கள் 50 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
புதுச்சேரியில் சிக்கியிருந்த கேரள மாணவர்கள் 50 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவித்து வந்த பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், அவர்களது சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு இரண்டு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக 3-வது முறையாக ஊரடங்கு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கம் குறையாததால் 4-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அதிக அளவில் தவித்து வருகின்றனர். இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்குச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in என்ற இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று கரோனா ஊரடங்கால் சிக்கித் தவித்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 107 பேரை மாநில அரசு புதுச்சேரிக்குக் கொண்டு வந்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்த 424 பேர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நேற்று வரை 2,448 பேர் புதுச்சேரியில் இருந்து வெளியே செல்வதற்கும், 1,080 பேர் புதுச்சேரிக்குள் வருவதற்கும், அவசரத் தேவைக்காக 2,034 பேர் என மொத்தம் 5,562 பேருக்கு இதுவரை ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் சிக்கி இருந்த 12 பேர் புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் தங்களது ஊருக்குச் செல்ல உதவுமாறு முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று (மே 14) மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, இரவு புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in