

தெங்கம்புதூரில் இருந்து நாகர்கோவிலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். வழியில் ஓரிடத்தில், கைநிறைய முகக்கவசங்களை வைத்துக்கொண்டு ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். சாலையோரம் நின்று பொருட்களை விற்பவர் என நினைத்துக் கடக்கையில் அவரது குரல் சன்னமாகக் கேட்டது.
“இந்தா பாருங்க தம்பி... லாக்டவுன் நேரத்திலும் நம்ம வயித்துப்பாட்டு கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டுத்தான் அரசு கடைகளைத் திறக்க சம்மதிச்சுருக்காங்க. அதுக்கு மதிப்பு கொடுத்தும், கரோனா தொற்றில் இருந்து காத்துக்கவும் கட்டாயம் மாஸ்க் போடுங்க. இதோ இதைப் போடுங்க. இலவசமாத்தான் கொடுக்குறேன்” எனக்குப் பின்னால் வந்தவரிடம் சொன்னதைக் கேட்டு பைக்கை நிறுத்திப் பேச்சுக் கொடுத்தேன்.
பொதுமுடக்கம் ஆரம்பிக்கப்பட்ட முதல் வாரத்தில் இருந்தே மாஸ்க் தைத்து, அதை இலவசமாக சாலையில் நின்று விநியோகித்து வருகிறார் உடையப்பன் குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி. இதுகுறித்து என்னிடம் பேசிய அவர், “என்னோட வீட்டுக்காரர் இறந்து நாலு வருசமாச்சு. எனக்கு மொத்தம் மூணு பிள்ளைங்க. மூணு பேருக்குமே கல்யாணம் முடிஞ்சுருச்சு.
நான் மூத்தவன் சிவன்கூட இருக்கேன். வாடகை வீட்டுல வாழ்க்கைப்பாடு கழியுற நடுத்தரக் குடும்பம்தான் எங்களோடது. இந்தக் கரோனா காலத்துல ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச உதவிகளை செய்யுறாங்க. எங்களுக்கு அந்த அளவுக்குப் பொருளாதார வசதி கிடையாது. அதேநேரம் எனக்கு தையல் நல்லாத் தெரியும். வீட்டுலயே தையல் மிஷினும் இருக்கு. அதான் தினமும் மூணு மணிநேரம் உட்கார்ந்து மாஸ்க் தைச்சு இலவசமாக் கொடுக்க ஆரம்பிச்சேன்.
குறைஞ்சது 150 மாஸ்க்கில் இருந்து, அதிகபட்சம் 500 மாஸ்க் வரை தைச்சு தினமும் ஏதாச்சும் ஒரு பகுதியில் இலவசமாக் கொடுத்துட்டு இருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச சின்ன சேவை இது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே முகக்கவசம் இல்லாமல் சாலையில் யாராவது செல்கிறார்களா என்று அவரது கண்கள் தேட ஆரம்பிக்கின்றன.