

புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு காலத்தில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகம் வாசிக்க 'கற்பி நூலகம்' என்ற திறந்தவெளி நூலகம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் ஒன்றிணைந்து 'கற்பி நூலகம்' என்ற திறந்தவெளி நூலகத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
இங்கு வரும் அனைவருக்கும் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வரும் ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்களை ஏற்பாடு செய்து இலவசமாகப் பாடம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த இளைஞர்களில் ஒருவரான கலைவாணன் கூறும்போது, "கரோனா ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலரது வயிற்றுப் பசியைப் போக்கி வருகின்றனர். இச்சூழ்நிலையில் புத்தக வாசிப்பு மூலம் அறிவுப் பசியை பொதுமக்களுக்கு ஊட்ட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் 'கற்பி நூலகம்' என்ற திறந்தவெளி நூலகத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
மேலும் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் மன உளைச்சலைப் போக்கவும், அவர்ளின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு எங்கள் ஊர் சமுதாய நலக்கூடத்தில் இலவசமாக இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளோம். இதற்காக தமிழ், கணக்கு, அறிவியல், சமூகவியல் பாடங்களுக்கு தனித்தனியே ஆசிரியர்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இங்கு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மாணவர்களுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம் வழங்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு சானிடைசர் கொடுக்கப்படுகிறது.
அனைவரும் வாசிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். இது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது" எனத் தெரிவித்தார்.