

மதுரையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் வழக்கறிஞர் அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் சில நாளுக்கு முன், ஜெயஸ்ரீ என்ற சிறுமியை கொடூரமாக எரித்துக்கொண்ட அதிமுக நிர்வாகிகள் இருவரை தூக்கிலிடவேண்டும். குற்றச்செயல் அதிகரிக்க காரணமான டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறவேண்டும். ஆன்லைனில் மதுபானம் விற்பனையைக் கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் உயர்நீதி மன்ற மதுரை கிளை முன் இன்று உண்ணாவிதரம் இருக்கப் போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில் நந்தினி, அவரது தந்தையை வீட்டில் வைத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய திட்டமிட்ட போலீஸார், மதுரை புதூர் பகுதியிலுள்ள அவர்களது வீட்டை அதிகாலை முதலே சுற்றி வளைத்தனர்.
தந்தை, மகள் காலை 8 மணிக்கு மேல் வெளியே செல்ல முயன்றபோது, அவர்களை கைது செய்து புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்எச்சரிக்கை (சட்டப்பிரிவு151) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீ ஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நந்தினியும், அவரது தந்தையும் ஏற்கனவே தமிழகத்தில் மதுவிலக்கு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.