

‘இந்து தமிழ்’ ஆன்லைன் செய்தி எதிரொலியாக மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளிலுள்ள ரேசன் கடைகளுக்கு தமிழக அரசின் ரூ.500 மதிப்புள்ள சிறப்பு மளிகை பொருள் தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் முடங்கி உள்ள பொதுமக்களுக்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு மாநிலம் முழுவதும் 29,486 ரேசன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை ஏப்ரல் 2-வது வாரத்தில் தமிழக அரசு அறிவித்தது.
மதுரையில் மளிகை பொருள் வழங்கும் திட்டத்தை ஏப். 21-ல் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகர்ப்புற ரேசன் கடைகளில் சிறப்பு மளிகை பொருள் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டன. ஆனால் புறநகர் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் மளிகை பொருள் தொகுப்பு விற்பனை நடைபெறவில்லை.
மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் இருந்து மளிகை பொருள்களை குறிப்பட்ட அளவுக்கு பொட்டலமாக கட்டி தொகுப்பாகவே ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மளிகை பொருட்களை மொத்தமாக ரேசன் கடைகளுக்கு அனுப்பி நீங்களே பொட்டலம் போட்டு விற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டது.
இதை ரேசன் கடைகளை நடத்தும் பண்டக சாலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஏற்க மறுத்ததால் புறநகர் ரேசன் கடைகளில் மளிகை பொருள் விற்பனை நடைபெறவில்லை. இது தொடர்பாக ‘இந்து தமிழ் ஆன்லைனில்’ மே 10-ல் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் புறநகர் ரேசன் கடைகளுக்கு சிறப்பு மளிகை தொகுப்பு விநியோகம் தொடங்கியுள்ளது. 19 வகையான மளிகைப் பொருட்கள் பொட்டலம் போட்டு தொகுப்பாகவே ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. சேடப்பட்டி, பேரையூர் தாலுகா ரேசன் கடைகளுக்கு நேற்றும், இன்றும் மளிகை பொருள் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனால் ஒன்றிரண்டு நாளில் புறநகர் ரேசன் கடைகளிலும் ரூ.500-க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்பனை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.