

மளிகை பொருட்களை பொட்டலம் போடுவது யார்? என்ற பிரச்சினையால் புறநகர் பகுதிகளில் செயல்படும் ரேசன் கடைகளில் தமிழக அரசின் கரோனா கால ரூ.500 மதிப்பிலான மளிகை பொருள் தொகுப்பு விற்பனை நடைபெறவில்லை.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் முடங்கி உள்ள பொதுமக்களுக்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை ஏப்ரல் 2-வது வாரத்தில் தமிழக அரசு அறிவித்தது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு 20 நாளாகியும் பெரும்பாலான ரேசன் கடைகளில் குறிப்பாக புறநகர் பகுதிகளில் ரூ.500 மளிகை பொருள் தொகுப்பு இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மளிகை பொருள்களை குறிப்பட்ட அளவுக்கு பொட்டலமாக கட்டி தொகுப்பாகவே ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.
தற்போது இதற்கு பதிலாக மளிகை பொருட்கள் மொத்தமாக ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும். அவற்றை ரேசன் கடை பணியாளர்களே குறிப்பிட்ட அளவில் பொட்டலமாக போட்டு மளிகை பொருள் தொகுப்பு தயாரித்து பொதுமக்களுக்கு விற்க வேண்டும் எனத் தெரிவித்ததை ரேசன் கடைகளை நடத்தும் பண்டக சாலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மறுத்துவிட்டது. இதனால் பொதுமக்கள் மளிகை பொருட்களை கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தென் மண்டல செயலர்/ மதுரை மாவட்டத் தலைவர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில், "ரேசன் கடை பணியாளர்கள் ஏற்கெனவே கரோனா நிவாரண நிதி வழங்குவது, வீடு வீடாக சென்று இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மளிகை பொருட்களை மாவட்ட சங்கத்திடம் மொத்தமாக வாங்கி ரேசன் கடை பணியாளர்களே பொட்டலம் போட்டு தனித்தனி தொகுப்பாக உருவாக்கி விற்பது என்பது சிரமமானது. எனவே, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் மளிகை பொருட்களை பொட்டலம் போட்டு தொகுப்பாக ரேசன் கடைகளுக்கு வழங்க வேண்டும்" என்றார்.