Published : 11 May 2020 03:39 PM
Last Updated : 11 May 2020 03:39 PM

மு.க.அழகிரி ட்விட்டர் கணக்கு சர்ச்சை: தயாநிதி அழகிரி விளக்கம்

அழகிரி பெயரில் உருவாக்கப்பட்ட போலிக் கணக்கு.

மு.க.அழகிரி ட்விட்டர் கணக்கு தொடர்பான சர்ச்சைக்கு அவரது மகன் தயாநிதி அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் போலியான கணக்குகள் தொடங்கி பகிரப்படும் தகவல்களால் பலரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் குறிப்பாக திரையுலகினர் குறித்த போலிக் கணக்குகளே அதிகம். அஜித், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலருமே தன் பெயரில் உருவாக்கப்பட்ட போலிக் கணக்குகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக மு.க.அழகிரி பெயரில் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு தொடர்பாக சர்ச்சை உருவாகியுள்ளது. டாஸ்மாக் கடைகள் தொடர்பாக ரஜினி வெளியிட்ட ட்வீட்டுக்கு ஆதரவு தெரிவித்து மு.க.அழகிரி ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட ட்வீட் மற்றும் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக வெளியிட்ட ட்வீட்களை உண்மை என நினைத்துப் பலரும் செய்தியாக வெளியிட்டனர். அது போலிக் கணக்கு என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

இது தொடர்பாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பதிவில் சிறு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கியமான பங்குள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக ஊடகங்களிலும் எனது தந்தை மு.க.அழகிரி இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அவரது பெயரில் இயங்கும் அத்தனைக் கணக்குகளும் போலியானவை.

இந்தப் பிரச்சினையை ஏற்கெனவே ஒருமுறை எதிர்கொண்டு பதில் சொல்லியிருக்கிறேன். இந்த முறையற்ற செயல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் சொல்வதைப் போல ஒரு மாயத்தை உண்டாக்கக் கூடாது. எனது தந்தையின் அலுவலகத்திலிருந்து எந்த (சமூக ஊடக) கணக்குகளும் இயக்கப்படவில்லை".

இவ்வாறு தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x