

வேலூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிக்கு சமீபத்தில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மனைவி,மகள், பேத்தி ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் வியாபாரியின் மனைவிக்கு பாதிப்பு உறுதியானது.
பின்னர், 2 பேரும் வேலூர்அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, அவருக்கு வேறு சில நோய்கள் இருந்ததால் அவர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டார். உடனே, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தும் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.