

கிராம மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டே தற்போதைய சூழலிலும் 100-நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
மதுரை திருமங்கலம் அருகிலுள்ள திரளி கிராமத்தில் 45 நாட்களுக்குப் பின், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார்.
பணியில் ஈடுபட்டோருக்கு கபசுர குடிநீர் பொடி,முகக்கவசங்களை அவர் வழங்கி, கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதன்பின் அமைச்சர் பேசியதாவது:
முதல்வர் கரோனா தடுப்பு நடவடிக்கையில் போர் கால அடிப்படையில் செயல்படுகிறார். கிராம மக்கள் பொருளா தாரத்தில் பாதிக்கும் சூழல் கருதி இந்த 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று தடுக்க, பணியின்போது, எவ்வாறு விதிமுறைகளை பின்பற்றுவது என, ஏற்கனவே அதிகாரிகள் உங்களுக்கு எடுத் துரைத்துள்ளனர். அதை பின்பற்றுங்கள்.
ஊரக பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடங்கள் மிக குறைவு, கோடை காலம் என்பதால் தற்போது வெயிலும் அதிகம். எப்போதும் போல் மர நிழலைத் தேடி கூட்டமாக போகாமல் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கபசுர குடிநீர், ரஸ்க், பழங்களை சாப்பிடுங்கள். 675 பணியிடங்களில் 600 இடங்களில் பணி நடக்கிறது. 75 பணியிடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
55 வயத்துக்கு மேலானவர்கள் பணிக்கு வர வேண் டாம் என, சொல்வது அவர்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவே. தகுதியான நபர்கள் மட்டும் பணி செய்ய வேண் டும்.
எல்லா பகுதியிலும் இப்பணியை மேற்கொள்ளலாம் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் மதுரை முதன்மை மாவட்டமாக இருக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.